ARTICLE AD BOX
Hello Friends…
ஒரு அப்பாவி சிறுமியோட மரணம், ஒரு குடும்பத்தையே! இருந்த இடம் தெரியாம அழிச்சுருச்சுனா நம்புவீங்களா?.
குல தெய்வமே ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்ததுனா உங்களால ஏத்துக்க முடியுமா? அப்படி ஒதுங்கி நின்னதுக்குண்டான காரணம் என்னனு தெரியுமா?
சுமார் 90 வருடங்களுக்கு முன்பு உண்மையாய் நடந்த ஒரு அமானுஷ்ய சம்பவத்தினை அடிப்டையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட திகில் கதையைத் தான் இன்னைக்கு நாம பார்க்கப் போறோம்.
வாங்க... மரண திகிலோட ஒரு பயணத்தை ஆரம்பிப்போம்...! 👻🔮".
welcome to "The Thigil Project”. - நான் உங்கள் நளன்.
தேனி மாவட்டத்துக்கு உட்பட்டு அமைந்துள்ள ஒரு கிராமத்துல தான் இந்த சம்பவம் கடந்த 1934-ஆம் ஆண்டு நடந்திருக்கு. இந்த சம்பவத்தை நமக்குத் தெரியப்படுத்திய நபர் தினகரன். அந்த தினகரனின் தாத்தா பெயர் ராசய்யா. இந்த ராசய்யாவோட கூட பிறந்த நபர் பெயர் அழகுமுத்து. இவங்க குடும்பம் அந்தக் காலத்துலயே நல்ல வசதியான குடும்பம் தான். ஆடு, மாடு, விவசாய நிலங்கள், வாழைத் தோப்பு, தென்னந் தோப்புனு எக்கச்சக்கமா இருந்திருக்கு. அவங்க அப்பாவும் கடைசி காலத்துல, அழகுமுத்து மற்றும் ராசய்யா இருவருக்கும் தனது சொத்துக்களைப் பிரிச்சுக் கொடுத்திருக்கார். ஆனாலும் அழகுமுத்துங்கிற நபருக்கு அவருக்கு வந்த சொத்துல ஒரு திருப்தி இல்ல, தன்னை விட தன்னோட தம்பி குடும்பத்துக்குத் தான் சொத்து அதிகமா போனதா அவருக்கு ஒரு எண்ணம் இருந்துகிட்டே இருந்திருக்கு. அது காலப் போக்குல மனசுக்குள்ள ஒரு பகையாகவே வளர ஆரம்பிச்சிருக்கு.
அழகுமுத்து நினைச்சது போல தன்னோட தம்பியான ராசய்யாவுக்கு சொத்து பிரிச்சுக் கொடுக்குறதுல கொஞ்சம் வித்தியாசம் இருந்திருக்கானு கேட்டா, உண்மை தான், அவரோட தம்பிக்கு சொத்து கொஞ்சம் அதிகமாத் தான் பிரிச்சு கொடுத்திருக்காங்க. அதுக்கு என்ன காரணம்னா, அழகுமுத்து குடும்பத்துல அவோரோட மனைவி மற்றும் அவருக்கு இருக்குற இரண்டு பசங்க மட்டும் தான்.
ஆனால் ராசய்யா குடும்பத்தை எடுத்துகிட்டோம்னா அவரோட மனைவி இரண்டு பசங்க மற்றும் ஒரு பெண் இருந்திருக்கு. பொதுவாகவே இப்பவும் தேனி போன்ற ஏரியாவில் பார்த்தோம்னா, பொண்ணுக்கு சீர் செய்ற விஷயத்துல அவங்க அளவுக்கு யாராலயும் செய்ய முடியாது அந்தக் காரணத்துனாலதான் இவருக்கு பெரிய பரப்பளவுள்ள தென்னந் தோப்பை குடுத்து இருந்தாங்க. ஆனால் இதை புரிஞ்சுக்காத அழகுமுத்து ஒரு பகையோடவே இருந்திருக்கார்.
இப்படியே பகை முற்றிப் போய் ரெண்டு குடும்பத்திற்கும் எந்த வித பேச்சு வார்த்தையும் இல்லாமலேயே போயிருச்சு. இப்படி இருந்த காலகட்டத்துல, ராசய்யா மற்றும் அழகுமுத்து இருவரும் சொந்தக்காரர் ஒருத்தரோட திருமணத்துல சந்திக்கிற நிலைமை வருது. அவங்களுக்குள்ள அப்போ எதுவும் பேசிக்கல. ஆனால் கொஞ்ச நேரம் கழிச்சு கல்யாணம் நடக்குற இடத்துல இருந்து தள்ளி ஒரு குரூப் கள்ளு குடிச்சுக்கிட்டு இருந்திருக்காங்க. அந்த குரூப்ல அழகுமுத்துவும் கள்ளு குடிச்சுக்கிட்டு இருந்திருக்கார்.
இப்படி இருந்த சமயத்துல, போதை நல்ல தலைக்கேறி தன்னோட தம்பி மேல உள்ள பகையை மனசுல வச்சுக்கிட்டு அவரோட குடும்பத்தை அசிங்கசிங்கமா திட்டிருக்கார். அவளோட பொண்ணுக்காகத் தான எங்கப்பன் அந்தத் தோப்பை அவனுக்கு கொடுத்தான். அவ நல்லா இருக்கமாட்டா, என்னோட வயித்தரிச்சல் அவளை சும்மா விடாதுனு சொல்லி சின்ன பொண்ணுன்னு கூட பார்க்காம தகாத வார்த்தையில திட்டிருக்கார்.
இந்த விஷயத்தை கேள்விப் பட்ட ராசய்யா கோவத்தோட உச்சிக்கே போய், அழகுமுத்துவை அங்க எல்லார் முன்னாடியும் வச்சே அடி வெளுத்துட்டாரு. அண்ணன் தம்பி ரெண்டு பேருடைய சண்டையை அங்க இருந்த எல்லாரும் விலக்கி விட, அழகுமுத்து உடம்புல அங்கங்க ரத்தக் காயமா இருந்திருக்கு.
அதோட வீட்டுக்கு வந்த அழகுமுத்துவைப் பார்த்த அவரோட மனைவி, என்னாச்சுன்னு அதிர்ச்சியாகிக் கேட்க, அவர் நடந்த அத்தனை விஷயத்தையும் சொல்லிருக்கார். அவங்க கணவர் மேல தான் தப்புனு தெரிஞ்சாலும், அவங்க குடும்பத்துக்கு ஏற்கனவே பகை இருக்குற காரணத்துனால இவங்களுக்கும், ராசைய்யா குடும்பத்தின் மீது அளவில்லாத கோபம் வந்திருக்கு. தன்னோட கணவனை அடிச்சு அசிங்கப் படுத்தினவாங்கள சும்மா விடக் கூடாதுனு முடிவு பண்ணுன அவரோட மனைவி தன்னோட தம்பி முத்தையனுக்குத் தகவலைத் தெரிவிக்கிறாங்க.
அவரும் இவங்க வீட்டுக்கு வந்து நடந்ததை எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, அவரோட மாமாவான அழகுமுத்து கிட்ட...
மாமா உங்களுக்கும் அவருக்கும் ஊரறிய சண்டை வந்துருச்சு. இப்பப் போய் நீங்களும், நானும் நேரடியா உங்க மேல தான் எல்லாரது சந்தேகமும் வரும், அதனால இதை வேற மாதிரி தான் கையாளனும்னு சொல்றார்.
வேற மாதிரினா எப்படி டானு கேட்கவும்,
அது ஒண்ணுமில்லக்கா எனக்குத் தெரிஞ்ச மலையாள மாந்த்ரீகவாதி ஒருத்தன் இருக்குறான். ஏவல் பண்ணி விடறதுல கை தேர்ந்தவன். அவன் கிட்ட விஷயத்தைச் சொன்னோம்னா காரியத்தை கச்சிதமா முடிச்சுருவான். என்ன சொல்றீங்கனு கேட்கவும்,
அழகுமுத்துவும், அவரோட சம்சாரமும் ஒத்துக்கிட்டாங்க.
அந்த முத்தையாங்கிற நபரும், அந்த மாந்த்ரீகவாதியைத் தேடிப் பிடிச்சு, நடந்த விஷயத்தையெல்லாம் சொல்லவும்,
அந்தக் குடும்பத்துல உள்ள நபர்களோட துணி, அல்லது காலடி மண்ணு ஏதாவது கொண்டு வாங்கனு சொல்லவும்,
இவங்களும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துட்டு இருக்குறாங்க.
பொதுவா ராசைய்யா வீட்டுல அவரோட மனைவியும், அவரோட பெண்ணும் மற்ற பெண்களோட ஆத்துக்குப் போய் துணிகளை துவைச்சு காயவெச்சுட்டு, அப்படியே குளிச்சுட்டு வீட்டுக்கு வர்றது வழக்கம். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்க நினைச்ச அழகுமுத்து மனைவி, ஒரு நாள் ஆற்றங்கரைல அவங்க வர்றதுக்கு முன்னாடியே நாணல் புதருக்கு நடுவுல மறைஞ்சு காத்திருக்காங்க.
அவங்க நினைச்ச மாதிரியே ஆத்துக்குத் துணி துவைக்க வந்த ஒரு சில பெண்களோட, ராசைய்யா மகள் மட்டும் தான் வந்திருக்காங்க. மகள் மட்டும் வந்தது ஏமாற்றமா இருந்தாலும், இவளுக்காகத் தான அந்த சொத்தைக் கொடுத்தாங்க. அப்ப இவகிட்ட இருந்தே ஆரம்பிப்போம்னு முடிவு பண்ணி அந்தப் பொண்ணு குளிச்சுமுடிச்சுப் போகும் போது மறைவா இருந்து அவங்களோட தடம் பார்த்து, காலடி மண்ணை எடுத்துகிட்டுப் போய் தன்னோட வீட்ல உள்ள முத்தையாகிட்ட கொடுக்க, அவரும் உடனே கிளம்பிப் போய், மாந்த்ரீகவாதிக்கிட்ட கொடுத்து, வேலையை ஆரம்பிக்கச் சொல்லிட்டார்.
அந்த மாந்த்ரீகவாதி வேலையை ஆரம்பிச்சு கொஞ்ச நாட்கள்ல ராசைய்யா குடும்பத்துல பிரச்சனை ஆரம்பமாகுது, அவரோட மகளுக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாம போகுது. இவங்களும் நாட்டு வைத்தியர் கிட்ட காட்டி சூரணம் அது இதுனு சாப்பிட்டாலும், கொஞ்ச நாள் கழிச்சு மீண்டும் உடல் நிலை சரி இல்லாம போக ஆரம்பிக்குது.
அப்படி ஒரு நாள் ராத்திரி அந்த சின்னப் பொண்ணுக்கு உடல் நிலை சற்று மோசமாக இவங்களும் கூடவே இருந்து என்ன ஏதுன்னு பார்த்துகிட்டு இருக்கும் போதே திடீர்னு குளிர் வந்த மாதிரி நடுங்க ஆரம்பிச்சிருக்கு. அது ஏற்கனவே பனிக் காலம்ங்கிறதுனால வீட்ல உள்ளவர்களும் அந்த பொண்ணுக்கு போர்வை எல்லாம் போர்த்திவிட்டு பாதுகாப்பா வச்சிருந்தாலும், அந்தப் பெண்ணுக்கு குளிர் கொஞ்சம் கூட குறையல. உடனே வைத்தியரை வர சொல்லிவிட்டுருக்காங்க. அவரும் வந்து பார்த்துட்டு, மருந்தெல்லாம் கொடுத்தாலும், பெருசா ஒன்னும் முன்னேற்றம் இல்ல.
அப்போ வைத்தியர் என்ன சொல்றார்னா, உங்க பொண்ணுக்கு வந்தது சாதாரண குளிர் காய்ச்சல் தான். சூரணம் கொடுத்திருக்கேன், நாளைக்கு காலைல வந்து என்னனு பார்க்குறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டார்.
ஆனால் காலைல அந்த கிராமத்தையே சோகத்துல ஆழ்துற மாதிரி ராசய்யா வீட்டுல இருந்து ஓலம் கேட்குது. ஊரெல்லாம் என்ன எதுன்னு கூடி வந்து பார்த்தா அந்தப் பொண்ணு இறந்தே போய்ட்டாங்க. இந்த விஷயம் ஊர் முழுக்கப் பரவ, ஊரே கூடி நின்னு செய்ய வேண்டிய காரியத்தை எல்லாம் செஞ்சு நல்ல முறைல தகனம் பண்ணிட்டாங்க.
ஊருக்கே இது சோகமான விஷயமாக இருந்தாலும் அழகுமுத்து குடும்பத்துக்கு ரொம்பவே மகிழ்ச்சியான விஷயமா இருந்துருக்கு. அவங்க மனைவியும் தன்னோட தம்பி முத்தையாக் கிட்ட விஷயத்தைச் சொல்லவும்,
அவரும் நான் சொன்ன மந்திரவாதி லேசு பட்டவன் இல்லனு சொல்லி கெத்தா சொல்ல, அழகுமுத்து என்ன சொல்றாருனா, எனக்கு அந்த பொண்ணு செத்தது மட்டும் போதாது. அவன் குடும்பத்துல ஒருத்தன் கூட இல்லாம சாகனும். அப்படிச் செத்தா, அவன் சொத்தும் முழுக்க நமக்கு வந்துடும், என்னை அசிங்கப்படுத்துன அவனும் அனுபவிச்ச மாதிரி இருக்கும்னு சொல்லி, மிச்ச உள்ள நபர்களையும் அதேப் போல கொல்ல ஏற்பாடு பண்ணனும்னு சொல்லவும், முத்தையாவும் பண்ணிடலாம்னு சொல்றாரு.
இங்க ராசைய்யா வீட்டுல, வீடே இருளுல மூழ்கிக் கிடக்கு, ஒரே ஒரு பொண்ணை இழந்த சோகத்துல ஆளாளுக்கு ஒரு மூலைல உட்கார்ந்து புலம்பிகிட்டு இருக்குறாங்க. என்ன பேசி, என்ன புலம்பினாலும் அவங்களோட சோகம் தீர்ந்த பாடில்ல. இப்படி கொஞ்ச நாள் போக திடீர் திடீர்னு ராசய்யா வீட்ல உள்ள ஆடு மாடுகள் எல்லாம் ஒவ்வொண்ணா சாகுது. விவசாயத்துல நல்லா விளைஞ்சு அறுவடைக்குத் தயாரா இருந்த சமயத்துல சொல்லி வச்ச மாதிரி இவங்க நிலத்துல மட்டும் எல்லாம் பூச்சி அரிச்சு வீணா போயிருச்சு. இது இவங்களுக்கு மட்டுமல்ல ஊர்காரங்களுக்கே ஒரு ஆச்சர்யாமாத் இருந்திருக்கு.
அப்போ தான் ஒரு நாள் ராசய்யா மனைவி, ராசய்யா கிட்ட, நமக்கு நேரம் சுத்தமா சரியில்ல, முதல்ல நம்ம பொண்ணு நம்மள விட்டுப் போய்ட்டா, அடுத்து ஆடு மாடெல்லாம் சாக ஆரம்பிக்குது. இப்போ நம்ம நிலத்துல உள்ள பயிர்கள் எல்லாம் பூச்சி அரிச்சுருக்கு. இதெல்லாம் உங்களுக்கு தப்பா படலையானு கேட்க,
நானும் யோசிச்சுகிட்டு தான் இருந்தேன். சரி நாளைக்கு வா, வடவீரநாயக்கன்பட்டில எனக்குத் தெரிஞ்ச ஜோசியர் ஒருத்தர் இருக்குறார். அவரைப் போய் பார்ப்போம்னு சொல்லி, அடுத்த நாள் வடவீரநாயக்கன்பட்டில உள்ள ஜோசியரை பார்க்கப் போறாங்க.
அவர் ஜோதிடர் மட்டுமல்ல, ஓரளவு மாந்த்ரீகமும் தெரிஞ்ச நபர்ங்கிறதால அவரைப் போய் பார்க்குறாங்க.
அவரும், இவங்க கிட்ட விஷயத்தைக் கேட்டு, பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து பார்த்து, எல்லா விஷயத்தையும் போட்டு உடைக்கிறார். உங்க குடும்பத்துல நடந்த அத்தனை கெட்டதுக்கும் உங்க அண்ணன் வச்ச செய்வினை தான் காரணம்னு சொல்லவும், இவங்களுக்கு ரொம்பவே அதிர்ச்சியா இருக்கு.
இதுக்கு என்ன வழின்னு அவர் கிட்ட கேட்கும் போது, உங்க குல தெய்வக் கோவிலுக்கு போயிட்டு வாங்க அங்க தான் உங்களுக்குத் தீர்வுன்னு சொல்றாரு.
சாமி, என் மக இறந்து ஆறு மாசம் தான் ஆகுது. ஒரு வருஷம் வரைக்கும் எங்களால கோவிலுக்கு போக முடியாதேன்னு சொல்லவும்,
யோசிச்ச ஜோசியர், சரி நான் உங்களுக்கு சின்னதா பூஜை செஞ்சு இப்போதைக்கு அவங்க பண்ணத கட்டுப்படுத்தி வைக்குறேன். ஆனால் அது நிரந்தர தீர்வு கிடையாது. இந்த பூஜையால உங்களோட பிரச்சனைகள் கொஞ்சம் குறையும். ஆனால் நீங்க குலதெய்வத்தின் கோவிலுக்கு போயிட்டு வந்த பிறகு தான் உங்க பிரச்சனை நிரந்தரமா சரியாகும் அதுக்குப் பிறகு உங்க குடும்பம் நல்லா வாழும்னு சொல்லறாரு.
சரி சாமி அப்படியே பண்ணுங்க, சூழ்நிலை சரியானதும் நாங்க போய்ட்டு வந்துறோம்னு சொல்லி பூஜைக்குத் தேவையான பொருட்களை எல்லாம் அன்னைக்கே வாங்கிக் கொடுக்குறாங்க.
சரி நீங்க இருபத்தி ஒரு நாள் கழிச்சு வாங்க. நான் பூஜை பண்ணி தர்ற பொருளை உங்க வீட்டு வாசல்ல கட்டுங்க. அதுல இருந்தே உங்க நிலைமை கொஞ்சம் சீராகும். இந்த இருபத்தி ஓர் நாளும் வீட்ல சுத்தபத்தமா இருக்குறது அவசியம்னு சொல்லிடறாரு.
அவர் சொன்ன நாள் வரவும் வீட்டை எல்லாம் அலசி விட்டு, அவர் கிட்ட போய் கேட்டதும், அவரும் இவங்களுக்கு உண்டான பூஜை பண்ணி ஒரு மஞ்சள் துணில முடிஞ்சு அதை இவங்கக் கிட்ட கொடுத்து இதை அப்படியே கொண்டு போய் உங்க வீடு நிலை வாசல்ல கட்டுங்கனு சொன்னதும் இவங்களும் அவங்க சொன்ன படியே செய்றாங்க.
அந்த ஜோசியர் சொன்ன படியே அவங்க பிரச்னைகளை எல்லாம் படிப்படியா குறைய ஆரம்பிக்குது. ஒரு பக்கம் பிரச்னைகள் பெரும் அளவுல இல்லனாலும், தனக்கு நடந்த அநீதிக்கு குலதெய்வ கோவிலுக்கு போய் நியாயம் கேட்கணும்னு காத்துகிட்டு இருக்குறாங்க.
ஒரு வழியா அந்தப் பெண் இறந்து ஒரு வருடம் ஆனதும் கொடுக்க வேண்டிய திதிகளை எல்லாம் கொடுத்துட்டு, ஒரு நாள் பார்த்து குல தெய்வத்தோட கோவிலுக்குப் போறாங்க.
வேட்டைக் கருப்பு தான் அவங்களோட குலதெய்வம்.
அவங்க குலதேய்வதோட கோவிலுக்குப் போய் அந்தக் கோவில் பூசாரியைப் பார்த்து சாமியை அழைச்சு வாக்கு கேட்டாகணும்னு சொல்றாங்க. ஆனால் பூசாரி எவ்வளவு அழைச்சும் சாமி இறங்கி வரவே இல்ல.
பூசாரியும் கடைசில என்ன பிரச்னைன்னு தெரியல ராசய்யா, சாமி மனசு இறங்கி வரலனு சொன்னதும், அங்கேயே ராசய்யா, வேட்டைக் கருப்பரைப் பார்த்து எனக்கு நடந்த அநீதி எல்லாம் உனக்குத் தெரியும். நீ எங்களுக்கு நல்ல முடிவு சொல்லியே ஆகணும், இல்லைனா குடும்பத்தோட நாங்க எங்க முடிவை தேடிக்குவோம்னு சொல்லி கண்ணீர் விட்டு அங்க இருந்து கிளம்பிட்டாங்க.
நம்ம குடும்பத்தை கடைசில தெய்வமே கை விட்டுடுச்சேன்னு நினைச்சு நொந்து போய் வரும் போது, ராசைய்யாவுக்கு ஒரு யோசனை தோணுது. அந்த ஜோசியர் சொல்லித் தான நாம் கோவிலுக்கு வந்தோம், இங்க அந்த சாமியும் நமக்கு உதவலையே, அதனால அவர் கிட்டயே போய் கேட்போம்னு நினைச்சு தன் குடும்பத்தைக் கூட்டிகிட்டு அவரைத் தேடிப் போறாரு.
அங்க போய் நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னதும், ஜோசியர் நேரா போய் பூஜைல கொஞ்ச நேரம் கண்ணை மூடி அமர்ந்து தியானிக்கிறார்.
ஜோசியர் என்ன சொல்லப் போறாரோன்னு ஆவலோடு இவங்க பார்த்துகிட்டு இருக்க, ஜோசியர் இவங்களைப் பார்த்து, ராசைய்யா ஒன்னும் பிரச்சனை இல்ல இன்னைக்கு ராத்திரி நீங்க சன்னதில கேட்ட கேள்விக்கு அந்தக் கருப்பனே பதில் சொல்லுவான். நீங்க கலங்க வேண்டாம்னு சொன்னதும், அரை மனசோட கிளம்பி வீட்டுக்குப் போறாங்க.
அன்னைக்கு ராத்திரி சாப்டுட்டு நல்லா அசந்து தூங்குனதும் ராசய்யாவுக்கு ஒரு கனவு வருது. அது என்னனா, கனவுல ஜமீன்தார் மாதிரி ஒரு நபர், நல்லா முறுக்கு மீசை வச்சுக்கிட்டு வெள்ளைக் குதிரைல வந்து ராசய்யா வீடு வாசல்ல நின்னு கூப்பிடுறார். ராசய்யாவும், அவரது மனைவியும் கனவுலயே எழுந்து போய் பார்க்கும் போது,
என்னடா என்ன கேட்கணுமோ அதை இப்பக் கேளுன்னு சொல்லவும், ஐயா நடந்த விஷயமெல்லாம் உனக்கே தெரியுமே ஒரு பாவமும் அறியாத என்னோட பொண்ண அநியாயமா கொன்னுட்டான் அந்தப் பாவி நீ எங்களோட குலதெய்வமா இருந்தும் எங்களை நீ காப்பாத்தலையே இது தான் நீதியானு கேட்க,
டேய் நான் நீதிக்கு மட்டுமல்ல, விதிக்கும் கட்டுப்பட்டவன். உன் பொண்ணோட விதி, அவ மாண்டு ஒரு கன்னியா மாறி அவ பிறந்த குடும்பத்துக்கு காவலா இருக்கணும்ங்கிறது தான். அது படி தான் எல்லாம் நடந்திருக்கு. உன் மக எங்கையும் போகல, என்கிட்ட தான் இருக்குறானு சொல்லி, அந்தப் பொண்ணோட பெயரை சொல்லிக் கூப்பிடவும், தெருவோரத்துல இருந்து, ராசய்யாவோட பொண்ணு சிரிச்ச படி ஓடி வர்றா. பொண்ணைப் பார்த்ததும் பெத்தவங்க ரெண்டு பேரும் "என் தாயினு" போய் கட்டி அழறாங்க.
அப்போ கருப்பன் என்ன சொல்றார்னா, உன் பொண்ணு இனி இந்தக் குடும்பத்தோட கன்னி தெய்வமா இருப்பா டா. அவளை நீங்க தொடர்ந்து கும்பிட்டு வர உங்க குடும்பம் செழிக்கும்னு சொல்லி மறையுறாரு. அதோட கனவும் கலையுது.
அதிகாலைல எழுந்ததும் கண்ட கனவை தன்னோட மனைவிகிட்ட சொல்ல, அவங்களும் அதைக் கேட்டு அழறாங்க. அப்போ உடனே நாம குல தெய்வத்தோட கோவிலுக்குப் போய் குறி கேட்போம்னு சொல்லி அன்னைக்கே கிளம்புறாங்க.
அங்கப் போனதும் பூசாரி இவங்களைப் பார்த்துட்டு, என்ன ராசய்யா இன்னைக்கும் வந்திருக்க, நேத்து தான் கருப்பன் இறங்கலையேன்னு கேட்கவும், பூசாரி ஐயா இன்னைக்குக் கூப்பிடுங்க, கருப்பன் கண்டிப்பா வாக்கு சொல்லுவான்னு சொன்னதும், பூசாரியும் கருப்பனை அழைக்கிறார்.
இன்னைக்கு அழைச்சதும் கருப்பன் இறங்கி வந்து,
என்னடா இப்போ, அதான் நேத்தே உன் பொண்ண உன்கிட்டக் கொடுத்துட்டனே, இப்போ என்னனு கேட்கவும்,
கருப்பா, என் பொண்ணு என் வீட்டுக்கு கன்னி தெய்வமா ஆனது விதியா இருந்தாலும் என் பொண்ணோட சாவுக்குக் காரணமா இருந்தவனை நான் சும்மா விட எனக்கு மனசு வரல. அது மட்டுமில்லாம அவன் இப்ப வரைக்கும் என்னை மட்டுமல்ல என் குடும்பத்தையே கூண்டோட அழிக்க எல்லா வேலையும் பார்த்துக்கிட்டுத் தான் இருக்கான். நான் அவனை விட்டு வச்சா அவன் என்ன விட மாட்டான். அதனால நீ தான் அவனுக்கு சரியான தீர்ப்பு கொடுக்கணும்னு சொல்லவும்,
இதோ பாருடா உன் பொண்ணு கையாள அவன் குடும்பம் அழியணும்னு தான் அவனோட விதி, அவன் குடும்பத்தோட விதி, உன் பொன்னே அவன் குடும்பத்தை கருவருப்பா. அதனால் நீ அவகிட்ட சொல்லி முறையிடுனு சொல்லி சாமி மலை ஏறிடுறாரு. தன்னோட பொன்னே நமக்கு இனி காவலா இருந்து நம்ம குடும்பத்தை காப்பாத்த போறான்னு தெரிஞ்சுக்கிட்ட ராசய்யாவும் அவரது மனைவியும் நேரா வீட்டுக்கு வந்து, தன்னோட பொண்ணுக்கு முறைப் படி பூஜை எல்லாம் பண்ணி வழிபாடு செய்றாங்க.
அன்னைக்கு ராசையாவோட மனைவி கனவுல வந்த அவங்களோட பொண்ணு,
அம்மா நீ கவலைப்படாத, இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்னு சொல்லி மறைஞ்சுருது.
இது நடந்து கொஞ்ச நாள்லயே ஒரு செய்தி வருது. அது என்னனா அழகுமுத்துவோட மூத்த பையன் தென்னை மரத்தோப்புக்குள்ள பாம்பு கடிச்சு இறந்து போயிருக்கார்னு தெரிய வரவும் ஊரே அழகுமுத்துவோட வீட்டுக்குப் போகுது. அங்க அழகுமுத்து சம்சாரமும், அவரும் தன்னோட மகனை மடில வச்சு அழுதுகிட்டு இருக்குறாங்க.
இந்த விஷயம் ராசய்யா குடும்பத்துக்கு தெரியவும், இது நம்ம பொண்ணு வேலைதான்னு புரிஞ்சுகிட்டு அவங்களும் அமைதியா இருந்துக்குறாங்க.
அழகுமுத்துவோட மகனை தகனம் பண்ணி முடிச்ச பிறகு, கொஞ்ச நாள்ல அழகுமுத்துவோட வீட்டுல உள்ள கிட்ட தட்ட நாலு ஆடுங்க ஒரே நாள் ராத்திரில வாயில நுரை தள்ளி செத்துக்கிடக்கு.
விடிஞ்சு பட்டிக்கு வந்து ஆட்டை மேய்ச்சலுக்கு கூட்டிட்டு போகலாம்னு வந்த அழகுமுத்துவுக்கு, அங்க ஆடுங்க எல்லாம் செத்துக்கிடக்கிறதை பார்த்து அதிர்ச்சி ஆகுறாரு.
என்ன பண்றதுனு தெரியாம வீட்ல போய் விஷயத்தைச் சொன்னதும் அவங்க மனைவியும் வந்து பார்த்துட்டு பயந்து போறாங்க. அவங்க என்ன நினைக்கிறாங்கனா, நாம ராசையா குடும்பத்துக்கு செய்வினை செஞ்சு வச்ச மாதிரி அவங்களும் நமக்கு ஏதும் செய்து வச்சிருப்பாங்களோனு யோசிச்சு அதை அழகுமுத்துக்கிட்ட சொல்லவும்….
அவரும் அதுக்கு வாய்ப்பிருக்கலாம்னு முடிவு பண்ணி, முத்தையாகிட்ட சொல்லி அந்த மலையாள நம்பூதிரியை வரச் சொல்லி கேட்போம்னு சொல்லவும், இவங்களும் முத்தையாவுக்கு தகவல் சொல்லி விடுறாங்க.
அந்த மலையாள மாந்த்ரீகரைப் பார்த்த முத்தையா, நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி என்ன நடந்ததுன்னு கேட்கவும், அவர் சோழிப் பிரசன்னம் போட்டுப் பார்த்து, அவங்க உங்களுக்கு எதிரா எதுவும் பண்ணல, ஆனால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த பெண்ணோட ஆத்மா இப்போ தெய்வ பலத்தோட இருக்கு. அதுதான் உங்க அக்கா குடும்பத்துல நடந்த பிரச்னைக்கு காரணம்னு சொல்லவும்,
முத்தையா மிரண்டு போறாரு. அதை எப்படியாவது அடக்கணும் இல்ல என் அக்கா குடும்பத்தையே அது அழிச்சுரும்னு சொல்லவும், அதுக்கு நான் இங்க இருந்து ஒன்னும் பண்ண முடியாது. உங்க ஊருக்கு வந்து உங்க அக்கா வீட்ல வச்சு பூஜைகளை செஞ்சா தான் அவங்க பாதுகாப்பா இருப்பாங்கன்னு சொல்றாரு.
முத்தையாவும் ஊருக்கு வந்து இந்த தகவலை தெரியப் படுத்த, அவங்க பயந்து போய், உடனே அவரை வர சொல்லுடானு சொல்லவும், முத்தையாவும் மாந்த்ரீகரைப் பார்த்து விஷயத்தைச் சொல்றாரு.
மாந்த்ரீகர் எப்ப வருவார்னு அழகுமுத்துவோட வீட்டுல காத்துகிட்டு இருக்குறாங்க. மாந்த்ரீகர் குறிப்பிட்ட நாள்ல வர்றதா தகவல் சொன்னதும் கொஞ்சம் நிம்மதியா இருக்குறாங்க.
அன்னைக்கு ராத்திரி தூங்கிகிட்டு இருக்கும் பொழுது அழகுமுத்து மனைவி கனவுல வந்த ராசய்யா பொண்ணு, என்ன பெரியம்மா, நாளைக்கு அவன் வந்து உங்கள காப்பாத்துவானு கனவு கண்டுக்கிட்டு இருக்கியா. இந்த ஊர் எல்லையைக் கூட அவனை மிதிக்க விடாம துள்ளத் துடிக்க அவனைத் தூக்குறேனு சொல்லி, ஆங்காராமா சிரிச்சுக்கிட்டு போயிருக்கு.
கனவு கண்டதும் பயந்து எழுந்து போன அழகுமுத்து மனைவி, அவரையும் எழுப்பி விஷயத்தைச் சொன்னதும், அவர் பயந்தாலும், அதை வெளிகாட்டிக்காம, நீ அதையே நினைச்சுகிட்டு இருக்கறதுனால உனக்கு அப்படி வரும் பேசாம தூங்குன்னு சொல்லிடுறாரு.
அடுத்த நாள் காலைல இவங்க குடும்பத்துக்கு ஒரு தகவல் வருது. அந்தத் தகவல் சொல்ல வந்தது யாருன்னா முத்தையாவின் ஊரைச் சேர்ந்த ஒரு நபர். அவர் என்ன சொல்றார்னா,
அக்கா முத்தையா அண்ணன் நேத்து நைட் காட்டெருமை முட்டி இறந்துட்டாருக்கானு சொல்லவும், முத்தையாவின் அக்கா அடிவயித்துல இருந்து அலறிருக்காங்க.
என்ன நடந்தது சொல்லுடான்னு கேட்கவும், நேத்து முத்தையா அண்ணன், எதோ உங்க வீட்டுல பூஜை பண்ணும்னு சொல்லி கேரளாவுல இருக்குற ஒரு சாமியாரை கூப்பிட்டு மாட்டு வண்டில வந்துகிட்டு இருக்கும் பொழுது வழில ரெண்டு காட்டெருமைங்க முட்டி கொன்னுருக்கு. அண்ணன் கூட வந்ததுக்கு அந்த சாமியாரும் சேர்ந்து இறந்துட்டார்னு சொல்லவும் முத்தையாவோட அக்கவுக்கு மயக்கமே வந்திருச்சு.
அரை மயக்கத்துல, இனி அவ நம்மள விடமாட்டா, நம்மள கொல்லாம விட மாட்டளேனு புலம்பிருக்காங்க.
அழகுமுத்துவும் என்ன செய்றதுன்னு தெரியாம, அவர் மனைவி கிட்ட சரி வா உன் தம்பியைப் பார்த்துட்டு வருவோம்னு சொல்லி அவங்கள சமாதனப் படுத்தி கூட்டிட்டு போறாரு.
இவங்களுக்கு ஒரு பக்கம் சோகமா இருந்தாலும், இன்னொரு பக்கம் ரொம்ப பயமா இருக்கு.
எப்படியாவது இதுல இருந்து தப்பிக்கணுமேன்னு தன்னோட குலதெய்வத்தோட கோவிலுக்கு போகலாம்னு கிளம்புறாங்க. ஆனால் இவங்கள ஊர் எல்லையிலேயே பார்த்த கோவில் பூசாரி என்ன அழகுமுத்து இந்தப் பக்கம்னு கேட்கவும்,
கோவிலுக்குத் தான் வந்தோம்னு சொல்லறாரு.
என்னப்பா உன் பையன் இறந்து இன்னும் முழுசா மூணு மாசம் கூட ஆகல. பின்ன எப்படி நீ கோவிலுக்கு வருவனு கேட்கவும், அவங்களுக்கு என்ன பண்றதுனே தெரியல. அவங்க அவர் கிட்ட எந்த ஒரு விஷயத்தையும் சொல்லவும் முடியல, காரணம் இவங்க பண்ணுன வேலை அப்படி.
வேற வழி இல்லாம தன்னோட வீட்டுக்கே திரும்பிப் போறாங்க.
அன்னைக்கு ராத்திரி ராசையாவோட கனவுல என்ன வந்திருக்குன்னா, அழகுமுத்துவும் அவரோட மனைவியும் வீட்ல தூங்கிகிட்டு இருக்குற மாதிரியும், அவங்க வீட்டு வாசல்ல ஒரு எருமை மாடு வந்து நிக்கிற மாதிரியும் கனவுல வந்திருக்கு.
இந்தக் கனவு என்னனு புரியலானாலும், அவர் ஒன்னும் கண்டுக்காம விட்டுட்டார்.
அடுத்த நாள் மதியப் பொழுதுல்ல ஊர் எல்லாம் அழகுமுத்து வீட்டுக்கு முன்னால கூடி நிக்குது. என்ன காரணம்னா, அழகுமுத்து, அவரோட மனைவி இரண்டு பேரும் அவங்க வீட்டுல தூக்கு மாட்டி இறந்து போயிருக்காங்க.
என்னாச்சுனு ஒன்னும் புரியாம அவங்களோட இன்னொரு மகன் கிட்ட கேட்கும் போது, அவர் ஏதும் பதில் சொல்லாம அப்படியே நொந்து போய் உட்கார்ந்திருக்கார்.
அவங்கள கீழ இறக்கும் போது தான் ஒரு விஷயத்தை கவனிக்குறாங்க. அது என்னனா அவங்கள யாரோ பலமா அடிச்ச மாதிரி அவங்க ரெண்டு பேரு கன்னமும் சிவந்து போயிருக்கு. அப்படி ஏன் சிவந்திருக்குனு யாராலயும் சொல்ல முடியல. யாருக்கும் எதுவும் புரியவும் இல்ல.
ஒரு வழியா அவங்களுக்கு இறுதி காரியங்கள் எல்லாம் அவரது மகன் மூலமா செஞ்சு முடிச்சுட்டாங்க. அப்படி இறுதி காரியம் செஞ்சு முடிச்ச அவங்களோட ரெண்டாவது மகன் என்ன ஆனாரு, அவருக்கு குடும்பம் எதுவும் இருக்கானு இப்ப வரைக்கும் தெரியவே இல்லை.
பல வருஷ காலமா அவரோட ரெண்டாவது பையனைப் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாத காரணத்துனால, அவங்க சொத்தை எல்லாம் பராமரிக்கிற பொறுப்பை ராசையாவோட குடும்பமே ஊர்ப் பெரியவர்களை வச்சுப் பேசி எடுத்துகிட்டாங்க.
இப்போ தான் ராசையாவுக்கும் அவரோட மனைவிக்கும் தங்களுக்கு நியாயம் கிடைச்சதுனு நிம்மதியா இருந்திருக்கு. தங்களோட பொண்ணு தான் இத்தனைக்கும் காரணம்னு தெரிஞ்சுக்கிட்ட ராசைய்யாவும், அவரது மனைவியும் அவங்களோட பெண்ணை தெய்வமா நினைச்சு கும்பிட ஆரம்பிச்சுட்டாங்க.
அவங்க மட்டும் கும்பிடறது இல்லாம அவங்க வம்சாவளிக்கும், நடந்த சம்பவங்களை எடுத்துச் சொல்லி அவங்களையும் கும்பிட சொல்றாங்க. இவங்க வீட்டுக்கு கன்னி தெய்வமா இருந்து இப்ப வரைக்கும் அவங்க குடும்பத்தை அந்த பெண் பாதுகாத்து வராங்க.
இந்த மாதிரியான திகில் சம்பவங்கள் உங்களுக்கு இஷ்டமா இருக்குனா... நம்ம நியூஸ் சேனலை கண்டிப்பா follow பண்ணுங்க!





English (US)